இறைச்சிக் கோழி மேலாண்மை

இறைச்சிக் கோழி மேலாண்மை


கறிக்கோழி
கறிக்கோழிகள் என்பது 8 வார வயதில் 1.5 -2.0 கிலோ உடல் எடையினை அடையக்கூடிய சேவல் மற்றும் பெட்டைக் கோழிகளாகும். இக் கோழிகளின் நெஞ்சு எலும்பு வளையும் தன்மையுடையதாக இருக்கும். இக்கோழிகளின் இறைச்சி மென்மையாக இருக்கும்.

வீடமைக்கும் முறைகள்
கறிக்கோழிகளை ஆழ்கூள முறையிலும், சாய்ந்த வலைத் தளங்களிலும், கூண்டுகளிலும் வளர்க்கலாம். ஆழ்கூள முறை கறிக்கோழி வளர்ப்பில், மற்ற முறை வளர்ப்பில் ஏற்படும் கால்கள் பாதிப்பு, நெஞ்சுப்பகுதியில் கட்டிகள் தோன்றுதல், அதிக முதலீட்டு செலவு போன்ற குறைகள் இல்லாததால், ஆழ்கூள வளர்ப்பு முறையே மிகவும் பிரபலமானது.

கோழிகளை வளர்க்கும் முறைகள்
கறிக்கோழிகளை ஒரே சமயத்தில் பண்ணையில் வளர்த்து, பிறகு ஒரே சமயத்தில் விற்று விடலாம் அல்லது ஒரே பண்ணையில் வெவ்வேறு கொட்டகையில் பல்வேறு வயதுடைய கோழிகளை வளர்ப்பது போன்ற இரண்டு முறைகளைப் பின்பற்றலாம்.

பண்ணையில் ஒரே சமயத்தில் கோழிகளை வளர்த்து விற்று விடுதல்
இம்முறை வளர்ப்பில் கோழிகளை வளர்க்கும் போது ஒரே சமயத்தில் பொரித்த கோழிக்குஞ்சுகளை வாங்கி, அவற்றை வளர்த்து ஒரே சமயத்தில் விற்று விட வேண்டும்.கோழிப்பண்ணையின் முழுக் கொள்ளளவிற்கும் கோழிக்குஞ்சுகளை வாங்கி வளர்த்து அவற்றை ஒரே சமயத்தில் விற்று விட வேண்டும்.

இம்முறைக் கோழி வளர்ப்பு சுகாதாரமானது. குறைவான நோய்க்கிருமிகளின் தாக்கம், குறைவான நோய் பரவுதல், குறைவான இறப்பு விகிதம், நல்ல வளர்ச்சி விகிதம், நல்ல தீவனம் மாற்றுத் திறன் போன்ற நன்மைகள் இம்முறை வளர்ப்பின் முக்கிய அம்சங்களாகும். ஆனால் பெரிய அளவிலான இறைச்சிக்கோழி வளர்ப்பிற்கு இம்முறை ஏற்றதல்ல.ஏனெனில் இம்முறையில் அதிக நிலையான முதலீட்டு செலவும், கொட்டகை அமைப்பதற்கும் அதிகமான செலவு ஆகும்.

பல பேட்ச்களில் கோழிகளை வளர்த்தல்
இம்முறைக் கோழி வளர்ப்பில் ஒரு பேட்ச்க்கு மேல் கோழிகளை பண்ணையில் 1-4 வார இடைவெளியில் கோழிகளை வளர்ப்பதாகும். இங்கு பண்ணையாளர் ஒரு நாள் வயதுடைய கோழிக்குஞ்சுகளை வளர்த்து ஒரு வாரத்திற்கு ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மூன்று வாரங்களுக்கு ஒரு முறை அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு முறை கோழிகளை விற்று விடுவதாகும். கோழிக்குஞ்சுகளை 5-6 வார வயது வரை, அல்லது குறிப்பிட்ட உடல் எடையினை அடையும் வரை வளர்த்து இறைச்சிக்காக விற்று விடுவதாகும்.
இந்தியாவில் இம்முறையில் 5-6 பேட்ச் கோழிகளை ஒரே சமயத்தில் வளர்த்து, ஒரு வாரத்திற்கு ஒரு முறை மொத்தமாக விற்று விடுவது அல்லது சில்லறை விற்பனை செய்யும் முறையும் பின்பற்றப்படுகிறது.

இடம், தீவனத் தட்டுகள் மற்றும் தண்ணீர் தட்டுகளின் அளவு
கறிக்கோழிகளின் உடல் எடை, கொட்டகை வீடமைப்பு, விற்பனை வயது, அவற்றின் உடலுக்கு ஏற்ற வெப்பநிலை போன்றவற்றால் அவைகளுக்குத் தேவைப்படும் இட அளவு மாறுபடும். தீவன மற்றும் தண்ணீர்த் தட்டுகளின் அளவும் சுற்றுப்புற வெப்பநிலை, கோழிகளின் உடல் நலம் ஆகியவற்றைப் பொருத்து மாறுபடும். கீழ்க்காணும் அட்டவணையில் கோழிகளுக்குத் தேவையான தீவனத் தட்டுகள், தண்ணீர்த் தட்டுகள் மற்றும் இட அளவு கொடுக்கப்பட்டுள்ளது.

வயது

ஒரு கோழிக்குத் தேவைப்படும் இட அளவு

ஒரு கோழிக்குத் தேவைப்படும் தீவனம் அளிக்கும் இடம் அல்லது தட்டு

ஒரு கோழிக்குத் தேவைப்படும் தண்ணீர் அளிக்கும் இடம் அல்லது தட்டு

18 நாட்கள் வரை

450 சதுர செமீ அல்லது
(0.5 சதுர அடி)

3 செமீ

1.5 செமீ

19 நாட்களிலிருந்து 42 நாட்கள் வரை

1000 ச.செமீ (1.1 சதுர அடி)

6-7 செமீ

3 செமீ

கறிக்கோழிக் குஞ்சுகள் பராமரிப்பு மற்றும் வளர்ப்பு
முட்டைக் கோழிகளைப் போன்றே கறிக்கோழிக் குஞ்சுகளின் பராமரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.

கூண்டு முறையில் கறிக்கோழிகளை வளர்த்தல்
கறிக்கோழிகளை கூண்டு முறையிலும் வளர்க்கலாம். வளரும் முட்டைக்கோழிகளின் கூண்டுகளைப் போலவே கறிக்கோழிகள் வளர்க்கும் கூண்டுகள் இருக்கும். கூண்டு முறை வளர்ப்பின் போது கறிக்கோழிகளின் நெஞ்சுப்பகுதியில் கட்டிகள் ஏற்படுவதைத் தவிர்க்க, கூண்டிலுள்ள கம்பிகளை பிளாஸ்டிக் பொருட்களால் கோட்டிங் செய்ய வேண்டும். கூண்டு முறையில் கறிக்கோழிகளுக்குத் தேவைப்படும் இட அளவு, ஆழ்கூள முறையில் தேவைப்படுவதில் பாதியளவே தேவைப்படும். கூண்டு முறையில் கறிக்கோழிகளை வளர்ப்பதில் உள்ள நன்மைகளும், தீமைகளும் பின்வருமாறு.

நன்மைகள்

  • அதிக எண்ணிக்கையிலான கோழிகளைக் குறைந்த இடத்தில் வளர்க்கலாம்.
  • விற்கும் போது கோழிகளை எளிதாகப் பிடிக்கும் வசதி உள்ளதால், கோழிகளுக்கு அடிபடுவது தவிர்க்கப்படுகிறது.
  • ஆழ்கூளத்திற்கான செலவு தேவையில்லை.
  • இரத்தக்கழிச்சல் நோயின் தாக்கமும் குறைவு
  • கோழிகள் ஒன்றையொன்று கொத்திக்கொள்ளுவதும் குறைகிறது.
  • சுத்தம் செய்வதும், கிருமி நீக்கம் செய்வதும் எளிது.
  • கோழிகளின் வளர்ச்சி விகிதம் மற்றும் தீவன மாற்றுத்திறன் அதிகம்.

தீமைகள்

  • கோழிகளின் நெஞ்சுப்பகுதியில் அதிக அளவில் கட்டிகள் ஏற்படுவதால், அக்கோழிகளின் இறைச்சியினைக் உபயோகத்திற்கு பயன்படுத்தாமல் கழித்து விடும் வாய்ப்பு அதிகம்.
  • கோழிகளின் கால்கள் பாதிக்கப்படுதல்
  • கோழிகளின் இறக்கை எலும்புகள் எளிதில் உடைந்து விடுதல்.
  • ஆழ்கூள முறையில் வளர்க்கும் போது கண்டறிய முடியாத வளர்ச்சி ஊக்கிகள் கோழிகளுக்குக் கிடைக்கின்றன.
  • கோழிகளின் எச்சம் இருக்கும் பகுதியினை சுத்தம் செய்வது, வேலையாட்களுக்கு எளிதாக இராது.
  • கூண்டுகளுக்கு ஆகும் அதிக நிலையான முதலீட்டு செலவு
  • வெயில் காலங்களில் கூண்டு முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு ஏற்ற சூழ்நிலை இராது.

தீவனமளித்தல்
பொதுவாகக் கறிக்கோழிகளுக்கு அவற்றின் முதல் நாள் வயதிலிருந்து, விற்கும் வயது வரை மூன்று வகைத் தீவனங்கள் அளிக்கப்படுகின்றன.
0-2 வார வயது – கறிக்கோழிகளுக்கான முந்தைய ஆரம்ப காலத் தீவனம் அல்லது குருணை
3-4 வார வயது – கறிக்கோழிகளுக்கு ஆரம்ப கால தீவனத்தை அளித்தல்
5-6 வார வயது – கறிக்கோழிகளுக்கு முடிவு கால தீவனத்தை அளித்தல்

கோழிகளுக்கு வெளிச்சம் அளித்தல்
திறந்த வெளி கறிக்கோழிக் கொட்டகையில், பொதுவாகப் பின்பற்றக்கூடிய வெளிச்சம் அளிக்கும் முறைகளைப் பின்பற்ற வேண்டும். குஞ்சு பருவத்தில் 24 மணி நேரம் வெளிச்சமும், பிறகு 23 மணி நேரம் வெளிச்சமும், 1 மணி நேரம் இருட்டும் கோழிகளை விற்கும் வரை பின்பற்ற வேண்டும். 1 மணி நேரம் இருட்டினை அளித்து அவைகளை இருட்டிற்குப் பழக்க வேண்டும். இதனால் மின்சாரம் இல்லாத போது இருட்டில் கோழிகள் பயப்படாமலும், அடைந்து விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை


வ.
எண்.

வயது

தடுப்பூசி

தடுப்பூசி அளிக்கும் முறை

1

முதல் நாள்

மேரக்ஸ் நோய்க்கான தடுப்பூசி

கழுத்தில் தோலுக்கடியில்

2

5-7ம் நாள்

ஆர்டிவி எஃப் 1

கண் வழியாகவும், மூக்கு வழியாகவும் செலுத்துதல்

3

14ம் நாள்

ஐபிடி தடுப்பூசி

கண் வழியாகவும், மூக்கு வழியாகவும் செலுத்துதல்

4

21ம் நாள்

ஆர் டி வி லசோட்டா

தண்ணீர் வழியாக

5

28ம் நாள்

ஐபிடி தடுப்பூசி

தண்ணீர் வழியாக


கறிக்கோழிகளை பாலின ரீதியாகத் தனியாகப் பிரித்து வளர்த்தல்
சேவல் மற்றும் பெட்டைக் கோழிகளுக்கான இடத் தேவையும், சத்துப் பொருட்களும் கட்டாயமாக வேறு வேறாக இருக்கும். சேவல்கள் கோழிகளை விட வேகமாக வளரும் என்பதால், சேவல்களுக்கு அதிக அளவு இட வசதியும், அதிக சத்துகளும் தேவைப்படும். இந்தக் காரணங்களுக்கான சில நாடுகளில் சேவல் மற்றும் பெட்டைக் கோழிகளைத் தனித்தனியாகப் பிரித்து வளர்க்கப்படுகின்றன. அங்கு ஒரு நாள் வயதடைந்த கறிக்கோழிக் குஞ்சுகளை, முட்டைக்கோழிகளைப் போன்றே இறகுகளை வைத்தோ அல்லது ஆசனவாய் பரிசோதனை மூலம் பாலினத்தை கண்டறிந்து தனித்தனியாக விற்கும் வரை வளர்க்கவேண்டும். சேவல்கள் மற்றும் பெட்டைக் கோழிகளுக்கென தனித்தனியாக தீவனம் அளித்து பராமரிக்க வேண்டும். சேவல்களுக்கு அதிக அளவிலான புரதமும், பெட்டைக்கோழிகளுக்குக் குறைவான அளவு புரதமும் தேவைப்படும்.

நன்மைகள்:

  • பாலினரீதியாக தனித்தனியாகக் கறிக்கோழிகளைப் பிரித்து வைப்பதால் கறிக்கோழிகள் ஒரே மாதிரி உடல் எடையினை அடையும்.
  • தனித்தனியாகக் கோழிகளைப் பிரித்து சிறப்பாகக் கறிக்கோழிகளை விற்கலாம். பெட்டைக் கோழிகளை தனியாக வளர்த்து, கறிக்காக தனியாக வைக்கலாம். சேவல்களில் இறைச்சியினை எலும்பிலிருந்து தனியாகப் பிரித்து விற்கலாம். மேலும் சேவல் கறியினை தனித்தனியாக வெட்டி பல்வேறு பாகங்களாகவும் வளர்க்கலாம்.
  • ஒவ்வொரு பாலினத்திற்கும் துல்லியமாத் தீவனமளித்து அவற்றை வளர்க்கலாம். இதனால்கோழிகளின் உடல் வளர்ச்சி அதிகரித்து, அவற்றின் தீவன மாற்றுத் திறனும் அதிகரிக்கும்.
  • ஒரே மாதிரியாகக் கோழிகள் வளர்வதால், அவற்றின் இறைச்சியினை சுத்தம் செய்யும் தானியங்கி இயந்திரங்களை சிறப்பாக செயல்படச் செய்யலாம்.
  • ஒரே மாதிரிக் கோழிகள் இருப்பதால் அவை கொத்திக் கொள்வது தடுக்கப்படும்.

தீமைகள்

  • கோழிக் குஞ்சுகளை பாலின ரீதியாக பிரிப்பதற்காக ஆகும் செலவு குறைவு.
  • பெரிய அளவிலான இனப்பெருக்கக் கோழிப்பண்ணைகளில் சேவல், பெட்டைக் கோழிக் குஞ்சுகளுக்குத் தேவை அதிகமாக இருக்கும். எனவே குஞ்சு பொரிப்பகங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப கோழிக்குஞ்சுகளை அளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

இறைச்சிக் கோழிகளின் உற்பத்தித் திறனை மதிப்பீடு செய்தல்
 1. உயிர் வாழும் திறன்

உயிர் வாழும் திறன் %

=

விற்ற மொத்த கோழிகளின் எண்ணிக்கை x 100

முதலில் விட்ட கோழிக்குஞ்சுகளின் எண்ணிக்கை

சாதாரணமாக இருக்க வேண்டிய கோழிகளின் உயிர் வாழும் திறன் 97-98%

2. தீவன மாற்றுத் திறன் அல்லது தீவன மாற்று விகிதம்

தீவன மாற்றுத் திறன்

=

ஒரு கோழி உட்கொண்ட மொத்தத் தீவன அளவு (கிலோக்களில்)

சராசரியாக ஏறிய உடல் எடை கிலோக்களில்

தீவன மாற்றுத்திறனின் அளவு கோழிகளின் ஆறு வார வயதில் 1.87 அல்லது அதற்கு குறைவாக இருப்பது மிகவும் உகந்தது.

3. கறிக்கோழிகளின் உற்பத்தித்திறன் பற்றிய மதிப்பீடு

கறிக்கோழிகளின் உற்பத்தித் திறன் மதிப்பீடு (BPEF)

=

கோழிகளின் உயிர் எடை x 100

தீவன மாற்றுத் திறன்

இந்த மதிப்பீடு அதிகமாக இருந்தால் நல்லது. இந்த மதிப்பீடு 100 அல்லது அதற்கு மேல் இருப்பது மிகவும் நல்லது.

4. கறிக்கோழிப் பண்ணையின் பொருளாதார அளவீடு (BFEI)

கறிக்கோழிப் பண்ணையின் பொருளாதார அளவீடு
=

சராசரி உடல் எடை (கிலோக்களில்) x உயிரோடு கோழிகள் இருப்பதன் சதவிகிதம்

தீவன மாற்றுத் திறன் x வளரும் பருவம் (நாட்களில்)

மேற்கூறிய BFEI மதிப்பு 2.0 அல்லது அதற்கு மேல் இருந்தால் கோழிப்பண்ணை நன்றாக நிர்வகிக்கப்படுகிறது என்றும், கோழிகளின் உற்பத்தித்திறன் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் இதன் மதிப்பு 1.3 அல்லது குறைவாக இருந்தால் கோழிகளின் உற்பத்தித்திறன் குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.

ஸ்குவாப் பிராய்லர்ஸ்
இவை 0.9 கிலோ எடையுடைய, 28 நாட்கள் வயது உடைய கோழிகள் ஸ்குவாப் பிராய்லர்கள் எனப்படும். இவை நேரடியாக வளர்க்கப்பட்டு, குடல் நீக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு நேரடியாகவோ அல்லது உறைவிக்கப்பட்டோ விற்கப்படுகின்றன.

                                                                                                                                                                      மேலே செல்க

கண்காட்சிக்கு கோழிகளுக்கு தயார் செய்தல்

கோழிகளை தேர்ந்தெடுத்தல்

  • நல்ல உடல்நிலையில் உள்ள கோழிகளை தேர்தெடுக்கவும். இக்கோழிகள் நல்ல உடல் நிலையுடனும் நல்ல தோற்றத்ததுடனும் இருப்பதால் போட்டியில் வெல்லும் வாய்ப்பு அதிகமாக வாய்ப்புள்ளது.
  • நல்ல உடல்நிலையில் உள்ள கோழிகளை தேர்தெடுப்பதால் பிற கோழிகளுக்கு நோய் பரவும் வாய்ப்பு மிகவும் குறைகிறது.

கோழிகளுக்கு பயிற்சி அளித்தல்
          கோழிகளின் இனத்திற்கான வரைமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.
கோழிகளை முன்னரே தேர்தெடுக்கவேண்டும். ஒரு வாரத்திற்கு முன்னரே கோழி கண்காட்சிக்கு வைக்கப்படும் கூண்டு போன்ற ஒரு கூண்டில் கோழிகளை வைக்கவேண்டும்.கண்காட்சியில் கோழிகளை கையாளும்விதம் போல தினமும் இரண்டு அல்லது மூன்று முறை கோழிகளை கையாளவேண்டும், இதனால் கோழிகள் கண்காட்சியில் பயப்படாது.சிவப்பு வண்ணக்கோழிகளை சூரிய ஒளியில் படாமல் வைத்திருக்கவேண்டும் அப்போதுதான் தோகையின் வண்ணம் மங்காமல் இருக்கும்.

கோழிகளை குளிப்பாட்டுதல்
          கோழிகளின் இறகுகள் மண் மற்றும் அழுக்குடன் இருந்தால் கண்காட்சிக்கு சிறப்பாக இருக்காது. கோழிகளை டிடர்ஜெண்ட் கொண்டு கழுவவேண்டும்.( இறகுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் டிடர்ஜெண்ட்களை உபயோகப்படுத்தகூடாது.). கோழிகளில் புறஒட்டுண்ணிகள் இருந்தால் 0.25- 0.50 சதவீதம் செவின் கரைசலில் மூக்கி எடுக்கவேண்டும்.
கோழிகளை 15 – 20 வினாடிகள் குளிப்பாட்டவேண்டும் .பிறகு உலரும் கூண்டில் 20 – 30 நிமிடங்கள் உலர வைக்கவேண்டும். கோழிகளை மெதுவாக உலரவைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

குளிப்பாட்டிய பிறகு மேற்கொள்ளவேண்டிய செயல்முறைகள்

  • குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் அல்லது வைட்டமின் ஈ எண்ணெயை ஒரு சின்ன துணியில் எடுத்து அதை கோழியின் கொண்டை , தாடி , அலகு மற்றம் கால் மேற்பகுதி ஆகிய இடங்களில் தேய்த்துவிடவேண்டும்.
  • சம பங்கு ஆல்கஹால், கிளிசெரின் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை கலந்து எடுத்த கலவை ஒரு நல்ல சுத்தபடுத்தும் கலவையாகும். இதைக் கொண்டு கால் மேல்பகுதி, கால், கொண்டை மற்றும் தாடி ஆகிய பகுதிகளை பாலிஸ் பண்ணவேண்டும்.
  • நகம் மற்றும் அலகு ஆகியவற்றை வெட்டிவிட வேண்டும்.
  • பல் குத்தும் குச்சியை கொண்டு கோழிகளின் நாசித்தூவரங்களை சுத்தம் செய்யவேண்டும்.

கோழிகளை எடுத்து செல்லுதல்
          Tகோழிகளை நல்ல சுத்தமான கூண்டுகளில் தட்டை அல்லது மரத்தூள்கள் போன்றவற்றை போட்டு எடுத்து செல்லவேண்டும். கோழிகளை எடுத்து செல்லும் போது தண்ணீர் அளிக்க கூடாது ஏனென்றால் தண்ணீர் சிந்தி ஆழ்கூளம் நாசமாகிவிடும். கோழிகளை ரொம்ப தூரங்களுக்கு எடுத்து சென்றால் அவ்வப்போது தண்ணீர் அளிக்கவேண்டும்.

கண்காட்சியின் போது கோழிகளை கவனித்தல்
          கண்காட்சியின் போது கோழிகளுக்கு போதுமான அளவு தீவனம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை அளிக்கவேண்டும்.

கண்காட்சியின் பிறகு கோழிகள் பராமரிப்பு
          கண்காட்சிக்கு பிறகு கோழிகளை தனியாக பிரித்து வைக்கவேண்டும். மற்ற கோழிகளுடன் உடனே கலக்கக் கூடாது. ஏனென்றால் கோழிக்கண்காட்சியின் போது பிற கோழிகளிலிருந்து நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது. கோழிகளை 14 நாட்கள் தனியாக பிரித்து வைத்திருந்த பிறகு தான் மற்றக் கோழிகளுடன் சேர்க்கவேண்டும்.

  மேலே செல்க